மார்கழி
இரவின் குளிரினிலே
மாட்டுத்தொழுவின்
மஞ்சத்திலே
சின்ன
இயேசு பாலகன்
சிங்காரமாய் வந்து பிறந்திட்டாரே!
மாபரன் மனிதனாய் வந்ததாலே
பூவுலகில் புன்னகைப் பூத்ததலே!
ஏழைகளின் ஏந்தல் உதித்ததாலே
வறியோரும் வளமாய் வாழ்ந்தனரே!
நீதியின்
அரசர் உதயமானதாலே
மண்ணில் புதுவிடியல் வந்ததே!
விண்ணவரும்
மண்ணவரும் மகிழ்ந்ததாலே
நாமும்
மகிழ்வோம், மகிழ்விப்போமே!
கடவுள் மனிதனான, 'கிறிஸ்து பிறப்பு' விழாவைக் கொண்டாடும் இந்நாள்களில் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் நம்மை தேடிவந்து, அன்னைமரியாளின் வயிற்றில் கருவுற்று, பெத்லேகம் நகரில் மாட்டுத்தொழுவத்தில் இடையருக்கும், ஞானிகளுக்கும் தன்னை வெளிப்படுத்தி, மனிதர்களின் துன்பத்திலும் இன்பத்திலும் பங்கேற்று, நம்மைப்போல வாழ்ந்து, மனிதனும் புனிதமடைய மீட்பின் வழியை நமக்கு காட்டினார்.
இந்த இயேசுவின் பிறப்பை ஆண்டுத்தோறும்க் கொண்டாடும்போது, இயேசுவின் வருகையை என்சோ பியாங்கி என்கிற இத்தாலிய சன்னியாசி மூன்று நிலைகளில் விளக்குகிறார்.
காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக்காண வந்த இறைமகன் இயேசுவை,
விண்மீன் ஏழக்கண்டு ஞானிகள் வணங்கினாலும், வானதூதரின் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியைக் கேட்ட இடையர்கள் தீவனத்தொட்டியில் இருந்த குழந்தை இயேசுவை ஆராதித்தாலும், மறைநூலையறிந்த மறைவல்லுநர்களும், அரச குடிமக்களும் ஏழையின் வடிவில் மாடடைக்குடிலில் பிறந்த, பாலனை இதயத்தில் ஏற்றவில்லை. இயேசுவின் முதல் வருகை, வறியவருக்கே வாழ்வைத்தந்தது.
இயேசுவின் இரண்டாவது வருகை, உலக முடிவின்போது அமையும். இயேசு தீமையை வென்று வெற்றிவீரராய் வருவார். நல்லவர்களையும், தீயவர்களையும் இரண்டாக பிரித்து, நல்லவர்களை தந்தையாம் கடவுள் ஏற்பாடு செய்திருக்கின்ற வானக வீட்டிற்கு அழைத்துச்செல்வார்.
அதுமட்டுமல்ல, நம்மோடு நற்செய்தி வழியாக, நற்கருணை வழியாக வாழும் இயேசுவை இதயத்தில் ஏற்றுவது இயேவின் மூன்றாம் வருகை, நம் இதயத்தில். இயேசுவின் இவ்வருகை, ஒவ்வொரு
நாளும எவனொருவர் இயேசுவை தனது உள்ளத்தில் ஏற்றுக்கொள்கின்றானோ அன்று நடைபெறுகிறது. தூய பவுல் கூறுவதுபோல நமது உடல் கடவுள் வாழும் ஆலயம். விவிலியத்தில் உறையும் இறைவனை, நற்கருணையில் பிரசன்னமாகும் இயேசுவை, நமது உள்ளத்தில் ஏற்பது நம்மை புதுப்படைப்பாக்கும், கிறிஸ்து பிறப்பு விழாவை மெருகூட்டும்.
இந்நாள்களில், இறைவனை நம்முள்ளத்தில் உறைய தேடுவோம். இயேசுவை அயலாரில், முதியவர்களில், நோயாளர்களில், கைவிடப்பட்டவர்களில், ஆறுதலுக்காக ஏங்கும் மனிதர்களில் கண்டு, அந்த இயேசுவை நமது வாழ்வில் பிரதிபலிப்போம்.
இந்த கிறிஸ்துமஸ் இனிய கிறிஸ்துமஸாக மாற வாழ்த்துகள்.