இறைவன் மீண்டுமொரு நல்லாயனை
கோட்டாறு தலத்திருச்சபைக்கு வழங்கினார்...
20-5-2017 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருட்பணி. நசரேன் சூசை அவர்களை கோட்டாறு மறைமாவட்ட புதிய ஆயராக நியமித்தார்கள்.
20-5-2017 அன்று, கோட்டாறு மறைமாவட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய நன்னாள். கோட்டாறு மறைமாவட்ட முதன்மைகளை மனதில் கொண்டு, இறைவன் அருட்பணி. நசரேன்
சூசை
அவர்களை புதிய ஆயராக நமக்கு தந்துள்ளார்.
அருட்பணி. நசரேன் சூசை
அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் பங்கைச் சார்ந்தவர்கள். தனது குருத்துவப் படிப்பை தூய அலோசியஸ் குருமடத்தில் தொடங்கி, மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பை சென்னையிலுள்ள திருஇருதயக் குருமடத்தில் முடித்து, 02-04-1989 அன்று தூய சவேரியார் பேராலயத்தில் வைத்து அருட்பணியாளராக திருபொழிவு செய்யப்பட்டார்கள்.
இணைப் பங்குத்தந்தையாக குளச்சலிலும், பங்குத்தந்தையாக இனையம் மற்றும் கன்னியாகுமரியிலும் பணியாற்றிய புதிய ஆயர் அவர்கள், மறைமாவட்ட அழைத்தல் பணிக்குழுவின் செயலராகவும், மறைவட்ட முதன்மைப் பணியாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்கள்.
புதிய ஆயர் நசரேன் சூசை அவர்கள் தனது இறையியல் மேல்படிப்பை பெல்ஜியத்திலுள்ள லுவைன் கல்லூரியிலும், முனைவர் படிப்பை ரோமையிலுள்ள கிரகோரியன் திருத்தந்தையின் பல்கலைக்கழகத்திலும் முடித்து, திருஇருதயக் குருமடத்தில் எட்டு ஆண்டுகள் இறையியல் பேராசிரியராகவும், இறையியல் பிரிவு கல்வி தலைவராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்கள்.
குருமாணவர்களுக்கு வழிகாட்டியாக, அருட்பணியாளருக்கு நண்பனாக, இறைமக்களுக்கு பங்குத்தந்தையாக, பணிக்குழுக்களின் பக்கபலமாக 28 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம், கோட்டாறு மறைமாவட்டத்தை வளப்படுத்தும் என நம்புகிறேன். பணி சிறக்க வாழ்த்துகிறேன். நல்ல உடல் உள்ள நலத்தை இறைவன் தர வேண்டுகிறேன்.
பத்து ஆண்டுகள் கோட்டாறு தலத்திருச்சபையை சீரும் சிறப்புமாக வழிநடத்திய எம் பாசமிகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் தொடர்ந்து நல்ல உடல், உள்ள நலனைக் கொடுத்து வழிநடத்த வேண்டுகிறேன்.
29-06-2017 அன்று, புதிய ஆயர் நசரேன் சூசை அவர்களின் ஆயர் திருநிலைப்பாடு மற்றும் மறைமாவட்ட பொறுப்பேற்பு விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அருட்பணி. ஞானதாஸ்.